பறவை:
இறக்கைகள் கொண்ட இருகாலியைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய இறகுகளுடைய முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள புள் என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த முட்டையிடும் விலங்குகளாகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புக்களால் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலகுவான பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகளாகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரேயோரு வகுப்பு பறவைகளேயாகும். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் ஒன்பதாயிரத்து அறுநூற்று எழுபத்திரண்டு பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.