பூனை :
பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணியாகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக வீட்டில் வளர்த்து வணங்கினர்.
பூனைகள் பொதுவாக 2. 5 லிருந்து 7 கிலோகிராம் வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1. 8 கிலோ கிராமிற்குக் குறைவாகக் காணப்படும். மெய்னீ கூன் போன்ற சிலவகைப் பூனையினங்கள் எப்போதாவது 11 கிலோக்கிராமிற்குக் கூடுதலாக வளர்கின்றன. உலக சாதனையாக 21 கிலோகிராம் எடையுடைய பூனைகளும் இருந்திருக்கின்றன. அதேபோல உலகிலேயே மிகச்சிறிய வயதான பூனையின் எடை கிட்டத்தட்ட 1 கிலோவாக இருந்துள்ளது பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆபிரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
பூனைகள் இயல்பாக மாமிச விலங்காகும். சிறிய வகைப் பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவையாகும். சிறிய தூரம் மட்டுமே வேகமாக இரையை விரட்டிச் சென்று துரத்தும் திறன் பெற்றவையாகும்.
பூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடம் தனித்தே இருக்கும். பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசி தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து தூங்கிக் கொள்வதும் உண்டு. பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நாக்கின் மூலம் முழுமையாக சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோமங்களை பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.