திருக்கோணேஸ்வரம் :
காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்தபோது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன.வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் கிழக்கே பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது.
பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது.
ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவை பற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது.
கி.மு.1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம்.
மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேசர் கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன.
இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம்.