பல்லவ தமிழ் :
பல்லவ கிரந்தத்தை பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? பல்லவ கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த பல்லவத் தமிழ் எழுத்துக்களும் அதே ஏழாம் நூற்றாண்டளவில் தமிழை எழுத பிரயோகிக்கப்பட ஆரம்பித்தது. பல்லவ கிரந்தத்தில் இல்லாத ற,ழ,ன போன்றவை வட்டெழுத்தில் இருந்து கடன்பெற்று எழுதப்பட்டன. மகரமும் லகரமும் கூட வட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்ட வடிவத்தைப் பெற்றிருந்தன.
இந்தக் காலகட்டங்களில் அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் இரண்டு எழுத்துமுறைகளில் எழுதப்பட்டது. பல்லவ-சோழ ராச்சியமாக இருந்த வட தமிழகத்தில் பல்லவ எழுத்துக்களிலும் பாண்டிய ராச்சியமாக இருந்த தென்தமிழகத்தில் வட்டெழுத்திலும் எழுதப்பட்டன.
பதினோராம் நூற்றாண்டளவில் வட்டெழுத்துமுறை முழுமையாக கைவிடப்பட்டு, தமிழ் முற்றிலும் பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட ஆரம்பித்தது. நம்முடைய தற்காலத் தமிழ் எழுத்துக்கள் இந்தப் பல்லவ எழுத்துமுறையில் இருந்து தோன்றியது.
பல்லவத்தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவேயில்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காணயியலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது. அதனால் எகர, ஏகார, ஒகர, ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.
”கொள” என்ற சொல் கொள், கோள், கெரள், கெர்ள், கேர்ள், கேரள், கேரள என்று என்னவாகவும் இருக்கலாம். இடத்திற்கு அமைவாக பொருள் கொள்ளுதல் வேண்டும்.