வீரமாமுனிவரின் தமிழ் :
வீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கிறித்துவ மிசனரி கொன்சடன்சோ பெசுகி பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். கிறித்துவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக தமிழ் மொழியை அவர் கற்றுக்கொள்ள நேர்ந்தது. தமிழ் எழுத்துமுறையினில் பல குறைகள் அவரை உறுத்தியது.
வெளிநாட்டு கிறித்துவ மிசனரிகள் தமிழை கற்றுக்கொண்டு கிறித்துவ மதத்தை பிரச்சாரம் செய்ய இவை தடையாக இருப்பதாக கருதினார். எனவே பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் எழுத்துமுறையில் புகுத்தினார். ஏற்கனவே கூறியது போல் தமிழில் புள்ளி ஏட்டளவில் இலக்கண நூல்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் அதன் பயன்பாடு மிகவும் அருகிக்காணப்பட்டது. அச்சின் மூலம் புள்ளியின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார். அதே போல எ, ஒ முதலிய குறில்களும் புள்ளி பெற வேண்டியிருந்தது, புள்ளி பெறாதது நெடில்களாகக் கருதப்பட்டன.
புள்ளியினை மீண்டும் பிரபலப்படுத்தினாலும் அதே எகர ஒகரங்களுக்கான புள்ளியை அவர் பிரபலப்படுத்தவில்லை. உயிர் எழுத்துக்கள் புள்ளி பெறுவதை அவர் விரும்பாத காரணத்தினால் எ, ஒ ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களை செய்து ஏ, ஓ என புது நெடில் உருவங்களை படைத்தார். அதே போல ஒற்றைக்கொம்பை மாற்றி நெடில்களுக்கு இரட்டை கொம்பை உருவாக்கினார். ஈகார உயிர்மெய்கள் ஒரு சுழி பெறுவது போல கொம்பும் இன்னொரு சுழி பெறுமாறு வடிவம் உருவாக்கப்பட்டது. புள்ளி பெறாத பழைய நெடில்கள், வீரமாமுனிவரின் தமிழில் குறில்களை குறித்தன.
அவர் எண்ணிய இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும் என்பது ஆனால், தற்போதைய நடைமுறையில் அது மேலிருந்து கீழாகத்தான் எழுதப்படுகின்றது. இவ்வாறு தான் காலப்போக்கில் எழுத்துக்கள் மாறுபாடுகளை அடைகின்றன. கால் போல இருந்த ரகரத்திற்கு கீழே இன்னொரு சாய்வுக்கோடு இடப்பட்டது.