வளையாபதி :
தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதியாகும். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற இது சமண சமயம் சார்ந்த ஒரு நூலாகும். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய எழுபத்திரண்டு பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
நவகோடி நாராயணன் என்பவர் ஒரு வைர வணிகனாவான். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப் பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற நாராயணன் வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்துவிடுகிறான். அவளோ தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை நாராயணனே’ என்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கின்றாள். இதனால் குடும்பம் ஒன்று சேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என இவ்விலக்கியம் கூறுகிறது.