குளக்கோட்டன் :
குளக்கோட்டன் இலங்கையின் கிழக்குப் பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இவர் ‘சோழகங்கதேவன்’ என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தார். இவரது தந்தை வரராமதேவனும் மனைவி ஆடகசவுந்தரியும் ஆவர். அவளது கட்டளையில் இருந்த பூதங்களைக் கொண்டே மன்னன் கந்தளாய்க் குளம் கட்டினார் என்பது சரித்திரமாகும். இவர் வரலாற்றுப்புகழ் பெற கோணேசர் ஆலயத்திருப்பணிகளும், கந்தளாய்க்குளமுமே அடிப்படைக் காரணங்களாகும். குளக்கோட்டனைப் பற்றி குறிப்புத் தரும் நூல்களில் கைலாச புராணமே காலத்தால் முந்தியதாகும்.
கோணேசர்கல்வெட்டு, திருக்கோணாச்சல வைபவம், திருக்கரைசைப்புராணம், கோணமாலை அந்தாதி, யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாணச் சரித்திரம் என்பனவும் இவரது குறிப்புக்களைக் கூறுகின்றது. இவை தவிர பிரட்றிக் கோட்டைச் சாசனம் குளக்கோட்டன் பற்றிய முக்கிய தகவலைத் தருகின்றது. குளக்கோட்டன் திருகோணமலை நகரை மலரும், கனிகளும் தரும் மரங்களால் சோலையாக்கினான். கோணேசர் ஆலயத்தில் மகா மண்டபம், முன் மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்ன சத்திரம், ஓதுவார் மடம் என்பனவும் முனிவர்கள், துறவிகள், பிராமணர்கள், அடியார்கள் தங்குவதற்குப் பெரும் மண்டபங்களும், மாளிகைகளும் உருவாக்கினான். தம்பலகாம ஆதிகோணநாயகர் கோவிலுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி செவிவழிக்கதைகள், திரிகோணாசலபுராணம், தட்சணகைலாயம், கோணேசர் கல்வெட்டு ஆகியன மூலம் அறிகின்றோம்.