சோமசுந்தரப் புலவர் :
தமிழறிஞரான சோமசுந்தரப் புலவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் ஆயிரத்துஎண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு வைகாசி இருபத்தைந்தாம் திகதி பிறந்தார். இவர் ‘தங்கத்தாத்தா’ என்று போற்றப்பட்டார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் ராமலிங்க உபாத்தியாயர், மானிப்பாய் மாரிமுத்து போன்றோரிடம் ஆங்கிலம் கற்றார்.
சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத்திறமையும் பெற்றிருந்தார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரிகதை, பசுவின்கதை உள்ளிட்ட நூல்களை இளம் வயதில் இயற்றியவையாகும். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணிமாலை, அட்டகம், அந்தாதி, சிலேடைவெண்பா என பல வடிவில் ஏறக்குறைய பதினையாயிரம் பாடல்களை எழுதிப்பாடியுள்ளார்.
கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞானபோதம், கந்தபுராண செய்யுள்களை தெளிவாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்கவைப்பார். தமிழையும், சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால் இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். சிறுவர்களுக்காக பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் ஆயிரத்துதொள்ளயிரத்து ஐம்பத்தைந்தில் நூலாக வெளிவந்தது. சிலேடைவெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பாகும். தமிழிற்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத்தாத்தா’ நவாலியூர் சோமசுந்தரப்புலவர். இவர் ஆயிரத்துதொள்ளாயிரத்து ஐம்பத்திமூன்றாம் ஆண்டு எழுபத்தைந்தாவது வயதில் மறைந்தார்.