சூடு பட்ட அந்தணர்கள் :
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும், மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயதாகியதால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோக பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.
தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாப்பிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார்.
அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்
வாங்கி வர புறப்பட்டனர்.
மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.
மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.
அதற்குப்பரிகாரம் காண எண்ணி அரண்மனை அந்தணர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.
பேராசைபிடித்த அந்தணர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனிகளைச் செய்து 108 அந்தணர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.
மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 அந்தணர்களுக்கு மன்னர் கொடுத்தார். அந்தணர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.
இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். அந்தணர்களுக்குத் தக்கப் பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.
அந்தணர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான்.
அந்தணர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் அந்தணர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.
அந்தணர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.
இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.
பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா அந்தணர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்.
"மன்னாதி மன்னா... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்துவிட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய அந்தணர்களுக்குச் சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் அந்தணர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.
இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார்.
இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான்.
முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 அந்தணர்களுக்குக் கொடுத்தால்தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே..."
அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால்தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். அந்தணர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.