நரியின் தந்திரம் :
ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்.
பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது.
பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்த போது அந்தக் காகம் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்கார்ந்தது.
இதனை ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது.
நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பார்த்து, நீ என்ன அழகாக இருக்கிறாய்! உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது இனிமையான குரலில் ஒரு பாட்டுக் கேட்க ஆசைப்படுகிறேன் என்று கூறியது.
மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை சந்தோசப்படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை மறந்து தனது இனிமையான குரலில் “கா” “கா” “கா” என்று கத்தியது.
அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீழே விழுந்து விட்டது. அதனைக் கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமார்ந்து விட்டது என நினைத்துக் கொண்டு வடையை கெளவி வாயில் எடுத்துக் கொண்டு சென்றது.
நரியின் தந்திர வார்த்தையை நம்பிக் காகம் ஏமார்ந்தது.